டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் 3 அணிகள்: கிறிஸ் கெய்ல் விமர்சனம் 

டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் 3 அணிகள்: கிறிஸ் கெய்ல் விமர்சனம் 

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தால் மிகவும் பிரபலமானவர் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல். அது மட்டுமின்றி 103 டெஸ்ட் மற்றும் 301 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு அனுபவமிக்க வீரர். அவர், சமீபகாலமாக நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டிகள் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்துள்ளார்.

அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டின் பெரும்பகுதியை விளையாடுவது இறுதியில் அந்த விளையாட்டையே கொன்றுவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.  மேற்கிந்திய தீவுகள் போன்ற சிறிய அணிகளின் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் செழிக்க சிறந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கருதுவதாக கெய்ல் கூறியிருக்கிறார்.  

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் மட்டுமே விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துவது நீண்ட கால விளையாட்டிற்கு நல்லதாக இருக்காது என்றும் கெய்ல் கவலை தெரிவித்துள்ளார்.  பல ஆண்டுகளாக கிரிக்கெட் மாறிவிட்டது, இது தற்போது பெரிய வணிகம், டி20 போட்டிகள் மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பெருந்தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.  

பெரிய அணிகள் அதிக ஊதியம் பெறுவதால் சிறிய அணிகளுக்கு பாதகம் ஏற்படுவதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.  50 ஓவர் உலகக் கோப்பை குறித்த கேள்விக்கு பதிலளித்த கெய்ல், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பிருப்பதாக கணித்தார்.  

இந்தியா நீண்ட காலமாக ஐ.சி.சி கோப்பையை வெல்லவில்லை என்பது தனக்கு தெரியும் எனக் குறிப்பிட்ட கிறிஸ் கெய்ல், இதேநிலை தான் தங்கள் அணிக்கும் என்று தெரிவித்தார்.  இந்திய அணி சொந்த மண்ணில் ஃபேவரிட்களாக விளையாடுவதால் அவ்வணி மீது அழுத்தம் இருக்கும் என்றும் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.