சித்தராமையா பயந்துவிட்டார், நானாக இருந்தால்...!!: துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்
பெங்களூரு: கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு திட்டத்தை பயம் காரணமாக சித்தராமையா கைவிட்டு விட்டதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்துள்ளது. ஆட்சிக்கு தலைமை தாங்கப் போவது யார் என கடும் போட்டி நிலவிய நிலையில், முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதுபோன்ற சூழலில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சித்தராமையா எடுத்த ஒரு முடிவு குறித்து டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2017ஆம் ஆண்டில், பசவேஸ்வரா நகர் முதல் ஹெப்பல் வரையில் எஃகு மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தபோது பெரும் சலசலப்பு ஏற்பட்டதை சிவகுமார் சுட்டிக்காட்டி உள்ளார். அச்சமயத்தில், சித்தராமையா பயந்து திட்டத்திலிருந்து பின்வாங்கியதாகவும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் சிவகுமார் கூறியுள்ளார். நானாக இருந்தால் பயந்திருக்க மாட்டேன் என்கிற ரீதியிலும் சிவகுமார் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, சித்தராமையா பயந்துவிட்டதாக் கூற முடியாது, பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்பட்டிருப்பார் என்று தெரிவித்துள்ளார். சில நேரங்களில் பொய்யான செய்திகள் வெளியாகி நல்ல முடிவுகள் எடுக்க தாமதமாகி விடுவதுண்டு, அந்த அர்த்தத்தில் தான் டி.கே.சிவகுமார் பேசியிருப்பார் என நினைக்கிறேன் என்றும் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.