பாரதிய ஜனதா ஒரு ‘வாஷிங் மெஷின்‘.. : வெளுத்து வாங்கும் எதிர்க்கட்சிகள்
மும்பை: மத்திய புலனாய்வு அமைப்புகளை ‘சவர்க்காரம்‘ செய்யும் சலவை இயந்திரம் போன்று பாரதிய ஜனதா பயன்படுத்துவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சரத்பவாரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அவர்கள், சரத்பவாருக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று தெரிவித்தனர்.
பிளவு தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதில், “ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களை (Income tax, CBI, ED) வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய சவர்க்காரத்துடன் பாரதிய ஜனதா எனும் சலவை இயந்திரத்திற்குள் போட்டால், அவர்கள் மீதான கறையை நீக்கி தூய்மையாக்கிவிடும்“ என ஜெய்ராம் ரமேஷ் கிண்டலடித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு இரங்கல் பா வாசிக்க வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதாவின் தூண்டுதலின் பேரில், மகாராஷ்டிராவில் விதை விதைக்கப்பட்டுள்ளதாக ரமேஷ் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் போது அது முன்னைவிட வலிமையானதாக இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.