I.N.D.I.A கூட்டணி; மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டியுள்ளதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் 26 கட்சிகள் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் கடந்த மாதம் 17-18ஆம் தேதிகளில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டணிக்கு I.N.D.I.A (Indian National Developmental Alliance - ‘இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி’) என்ற பெயர் அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயர் சுருக்கத்தை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
I.N.D.I.A என்ற பெயர் சுருக்கத்துடன் தேசியக் கொடியையும் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சதிஷ் சந்திரா சர்மா, நீதிபதி அமித் மகாஜன் ஆகியோர் முன்பு இன்று (ஆக. 03)விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனுவை விசாரிக்க வேண்டியிருப்பதாகக் கூறிய நீதிபதிகள், மத்திய உள்துறை மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகங்கள், தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் 26 அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். எதிர்மனுதாரர்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நமது தேசத்தின் பெயரை இழுப்பதன் மூலம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மிகவும் தந்திரமாக தங்கள் கூட்டணியின் பெயரை நமது தேசத்தின் பெயராக முன்வைத்துள்ளதாக கூறப்பட்டது. அதன் வாயிலாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நமது சொந்த தேசத்துடன் அதாவது I.N.D.I.A உடன் மோதுவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இது சாமானிய மக்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கும் என்றும் மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.