கீதா பிரஸ்-க்கு காந்தி அமைதிப்பரிசு; காங்கிரஸ் விமர்சனத்திற்கு மத்திய அரசு பதிலடி  

கீதா பிரஸ்-க்கு காந்தி அமைதிப்பரிசு; காங்கிரஸ் விமர்சனத்திற்கு மத்திய அரசு பதிலடி  

காந்தி அமைதி பரிசு கீதா அச்சகத்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.  அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்துக்கான சிறந்த பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ்ஸை தேர்வு செய்து, பிரதமர் மோடி தலைமையிலான குழு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மத்திய பண்பாட்டு அமைச்சகம் சார்பில் நேற்று (18.06.23) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  இந்த விருது 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை, பாராட்டுப் பத்திரம், பட்டயம் மற்றும் நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள் அல்லது கைத்தறிப் பரிசுப் பொருளைக் கொண்டிருக்கிறது.  காந்தி அமைதிப் பரிசு என்பது மகாத்மா காந்தி பின்பற்றிய கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  கீதா பிரஸ்ஸூக்கு மத்திய அரசின் காந்தி அமைதி விருது வழங்கப்படுவதான அறிவிப்புக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பண்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பை விமர்சித்திருக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்த முடிவு கேலிக்கூத்தானது எனச் சாடியுள்ளார்.  இது சாவர்க்கருக்கும் கோட்சேவுக்கும் விருது வழங்குவது போன்று என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.  இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முஸ்லீம் லீக்கை மதச்சார்பற்ற அமைப்பாக கருதுபவர்களைத் தவிர யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரசை விமர்சித்துள்ளார். கீதா பிரஸ் இந்தியாவின் பண்பாடு, நமது நெறிமுறைகள் மற்றும் இந்து நம்பிக்கையுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கீதா பிரஸ் ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும் வகையில் குறைந்த விலையிலான இலக்கியங்களை உருவாக்கி வருவதாகவும் ஜிதேந்திர சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.