உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. . மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்குமேல் சுந்தரேசப் பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. 12-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன. மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் புறப்படுகிறார்.