ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தம்; உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தம்; உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

டெல்லி: அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை குஜராத் நீதிமன்றம் கடந்த மாதம் 7ஆம் தேதி நிராகரித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு, இன்று (ஆக.3) மீண்டும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ராகுல் காந்தியின் பேசியது ரசிக்கக்கூடியதாக இல்லை என்பதில் சந்தேகமில்லை, பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்களது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எந்தவிதமான சிறப்பு காரணத்தையும் விசாரணை நீதிமன்றம் குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் கூறினர். தண்டனை ஒரு வருடம் 11 மாதங்கள் வழங்கப்பட்டிருந்தால், ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டிருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணை நீதிமன்ற உத்தரவின் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. அது ராகுல் காந்தி தனது பொது வாழ்க்கையைத் தொடரும் உரிமையைப் பாதிப்பது மட்டும் இல்லாமல், அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையையும் பாதித்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.