மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி; வாகனத்தை தடுத்து நிறுத்திய காவல்துறை
இம்பால்: மணிப்பூரில் பட்டியல் பழங்குடியினர் பிரிவின் கீழ் தங்களை சேர்க்க வேண்டும் என்ற மேதி சமூகத்தின் கோரிக்கைக்கு பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் கடந்த மே மாதம் 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து மணிப்பூருக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேதி மற்றும் குக்கி சமூகங்கள் அமைதியை நிலைநாட்டி இயல்பு நிலையைக் கொண்டுவரப் பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார். இருப்பினும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள நேரம் ஒதுக்க முடிந்த பிரதமர் மோடியால், உள்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க முடியாதா? என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இதுபோன்ற சூழலில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (29,ஜூன்) மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்குச் சென்றார். அங்கிருந்து அவர், கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சுரசந்த்பூர் (Churachandpur) பகுதிக்கு தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது (Bishnupur) பிஷ்னுபுர் என்ற இடத்தில் ராகுலின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுலின் வாகனத்தை தாக்குதல்காரர்களின் வாகனம் எனக்கருதி, பாதிக்கப்பட்ட மக்கள் தாக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளதால் அவரை தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது இரண்டு நாள் பயணத்தின்போது மணிப்பூரில் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து ராகுல் காந்தி பேச உள்ளார்.