பெரும்பான்மை மக்களின் ஆதரவை திரட்டவே மணிப்பூரில் கலவரம்; பாஜக மீது சிபிஎம் சாடல்
கோவை: மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் பெரும்பான்மை மக்களின் ஆதரவைத் திரட்டவே மணிப்பூரில் பாரதிய ஜனதா கலவரத்தை திட்டமிட்டு தூண்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரின் ஆதரவைத் திரட்டுவதற்காக ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டு கலவரங்களை நடத்தி வருவதாக பாலகிருஷ்ணன் சாடினார்.
மணிப்பூரில் மே 3ஆம் தேதி தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாக நீடிப்பதாகவும், வன்முறையால் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
மணிப்பூரில் இடம்பெயர்ந்து தற்போது நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயலைப் பாராட்டுவதாக கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதேபோன்ற உதவியை மத்திய அரசும் செய்திட வேண்டும் என்று கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.