பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் மகுடம் சூடப்போவது யார்?

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி  மகளிர் பிரிவில் மகுடம் சூடப்போவது யார்?

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான இகா ஸ்வியாடெக், கரோலினா முச்சோவாவை எதிர்கொள்கிறார்.

 

தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கிற்கும், தரவரிசையில் 43ஆவது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா முச்சோவாவிற்கும் இடையிலான இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் காயங்களிலிருந்து மீண்டு முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்திருக்கும் கரோலினா பட்டம் வெல்ல முனைப்புக் கொண்டுள்ளார்.

 அரையிறுதியில், உலகின் 2ஆம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்காவை போராடி வீழ்த்தியதன் மூலம் டென்னிஸ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் கரோலினா. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

இதேபோன்று முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.இறுதிப் போட்டியை எட்டியதன் மூலம்,15 ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் தொடர்ச்சியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மூன்றாவது இளம்பெண் என்ற பெருமையை ஸ்வியாடெக் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் கிறிஸ் எவர்ட் லாயிட் மட்டுமே தனது முதல் ஐந்து தோற்றங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

 22 வயதே நிரம்பிய இகா ஸ்வியாடெக், மூன்றாவது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் நான்காவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றெடுக்க பேரார்வம் கொண்டுள்ளார். இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றால், ஸ்வியாடெக் வெல்லும் 14ஆவது பட்டமாக இது அமையும்.