நாடாளுமன்றம் முடக்கம்; எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா கடிதம்  

நாடாளுமன்றம் முடக்கம்; எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா கடிதம்  

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார்.

மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று, அவர்களில் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டுள்ளன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ளன.

இப்பிரச்னையில் மத்திய பாரதிய ஜனதா அரசு எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுபோன்ற சூழலில், உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மணிப்பூர் பிரச்னையை விவாதிக்க அரசு தயாராக உள்ளதாகவும், அதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும்உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூர் பிரச்னையை தீர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியின் அதிகாரத்துவ கட்டுப்பாடு உள்பட 10 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருப்பதாக அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். அவை என்னென்ன மசோதாக்கள் என்பதையும் எதிர்க்கட்சிகளுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் அமித்ஷா பட்டியலிட்டுள்ளார்.