காயத்திலிருந்து மீளும் கே.எல்.ராகுல்; சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப தீவிரம்
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல். அண்மையில் முடிவடைந்த ஐ.பி.எல் போட்டித் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் கே.எல்.ராகுல் சேர்க்கப்படவில்லை.
இதுபோன்ற சூழலில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்பயிற்சியில் ஈடுபடும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் வெளியிட்டுள்ளார். "நாள் 58..." என்ற தலைப்புடன் ராகுல் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், கடந்த மாதம் தனக்கு தொடை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக மருத்துவர்களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார். விரைவில் முழுமையாக குணமடைந்து சிறந்த நிலைக்குத் திரும்பவும் மீண்டும் களத்தில் இறங்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வீரராகத் திகழும் கே.எல்.ராகுல், உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக 11 போட்டிகளில் விளையாடி, 636 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 21 இன்னிங்ஸில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்திருக்கிறார்.