ரொனால்டோ 200; புதிய உலக சாதனை
ஐஸ்லாந்து: நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 200ஆவது சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி உள்ளார்.
புயல்வேக ஆட்டத்தால் கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ரொனால்டோ. நட்சத்திர வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர், 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கஜகஸ்தான் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் மாற்று ஆட்டக்காரராக போர்ச்சுகல் அணிக்காக முதன்முறையாக களமிறங்கினார்.
19 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய அவரது கால்பந்து பயணம் இது நாள்வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இதுபோன்ற சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டமொன்றில், ஐஸ்லாந்து அணிக்கு எதிராக ரொனால்டோ பங்கேற்று விளையாடினார். விறுவிறுப்பு நிறைந்த இப்போட்டியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து முத்திரை பதித்தார். அந்த கோலே போர்ச்சுகல் அணியின் வெற்றி கோலாகவும் அமைந்தது.
இந்த ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் 200ஆவது சர்வதேச போட்டியில் பங்கேற்ற முதல் கால்பந்து வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன்னர் குவைத் வீரர் பதர் அல் முதாவா 196 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்திருந்தார். அந்தச் சாதனையை கடந்த மார்ச் மாதம் ரொனால்டோ முறியடித்தார்.
புதிய சாதனை குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள ரொனால்டோ, இந்த தருணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். 2024, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் தன்னால் போர்ச்சுகல் அணியில் பங்கேற்று விளையாட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தாய்நாட்டு அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், எதிர்காலம் குறித்து கடவுள் மட்டுமே அறிவார் என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
200ஆவது சர்வதேச போட்டியில் விளையாடி புதிய சாதனை நிகழ்த்தியிருக்கும் ரொனால்டோவுக்கு கால்பந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.