ஆஷஸ் வரலாறு: கோப்பை சிறியது..மோதல் பெரியது..!!

ஆஷஸ் வரலாறு: கோப்பை சிறியது..மோதல் பெரியது..!!

நீண்ட நெடிய பின்னணி கொண்ட கிரிக்கெட் வரலாற்றில், இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலமானதாகும்.

உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதைவிட ஆஷஸ் தொடரில் வெற்றி பெறுவதைத் தான் இவ்விரு அணிகளும் பெருமையாக கருதுகின்ற என்றுகூடச் சொல்லலாம். இத்தகைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய ஆஷஸ் தொடர் குறித்து அறிந்து கொள்ள அதன் பின்னணியை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்.

சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர், 1882 வரை ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வென்றது கிடையாது. ஆனால் 1882 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் முதன்முறையாக வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலிய அணி. அந்த ஒரு போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி தோற்றுப்போனது. தொடரை வென்றது என்னவோ இங்கிலாந்து தான்.

ஆனாலும், ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து தோற்றதை கடுமையாக விமர்சித்து அந்நாட்டிலிருந்து வெளியாகும் ‘தி ஸ்போர்டிங் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதில், “இங்கிலாந்து கிரிக்கெட் செத்துவிட்டது, இங்கிலாந்து கிரிக்கெட் எரிக்கப்பட்டு சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது“ என இரங்கல் செய்தியாக வெளியிட்டது ‘தி ஸ்போர்டிங் டைம்ஸ்’ பத்திரிகை.

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைவது அந்த அளவுக்கு அவமானமாக கருதப்பட்டது. இன்றும் கூட அப்படித்தான்.

பின்னர், 1882-83 சீசனில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்துகொண்டது. இரண்டு டெஸ்ட்களின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்று ஆஸ்திரேலியாவை பழிதீர்த்துக் கொண்டது.

அதற்குப் பரிசாக இங்கிலாந்து கேப்டன் இவோ ப்லிக்கிற்கு (IVO  BLIGH) ஒரு சிறிய கோப்பையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பெயில்ஸ்களை எரித்து சாம்பலாக வழங்கியதாக கூறப்படுவதுண்டு. மெல்போர்னைச் சேர்ந்த மூன்று பெண்கள் தான், இதனை வழங்கினர் என்றும் சொல்வார்கள்.

அதன்பிறகு 20 ஆண்டுகள் கழித்து 'ஆஷஸ்' என்ற பெயரில் அதிகாரபூர்வ தொடர் ஆரம்பமானது. 1921ஆம் ஆண்டில் லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் ஆஷஸ் கோப்பையின் வடிவம் வெளியிடப்பட்டது. மரக்கோப்பைக்குள் சாம்பல் அடைக்கப்பட்டது போன்ற 5 அங்குல கோப்பையாக அது வடிவமைக்கப்பட்டது.

தற்போது அந்தக் கோப்பையை எந்த அணி வென்றாலும் அவ்வணி ஆஷஸ் சாம்பியன் என்றழைக்கப்படுகிறது.

இந்த தொடர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை நடந்து முடிந்துள்ள 340 போட்டிகளில் 140-ல் ஆஸ்திரேலியாவும் 108 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 92 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்திருக்கின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள 72 தொடர்களில் ஆஸ்திரேலியா 34 தொடர்களிலும் இங்கிலாந்து அணி 32 தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.

தற்போது நடைபெற்று வருவது 73ஆவது தொடராகும்.ஆஷஸ் தொடர் முழுவதும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் ரசிகர்கள் எப்போதும் பதற்றத்திலேயே இருப்பது வழக்கமானது. அத்துடன் ஆடுகளத்தில் ஆவேசம், வாக்குவாதம், ஒருவரை ஒருவர் மாறி மாறி வசைபாடுவது என்பதெல்லாம் இத்தொடரில் வீரர்களுக்கு சர்வசாதாரணம்.