டிஜிட்டல் மயமாகிறது ‘டாஸ்மாக்’; ரூ.10 கூடுதல் வசூலுக்கு ‘செக்‘ வருமா?
சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 4,810 டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் குவார்ட்டருக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக மது வாங்குவோரின் மனக்குமுறலாக இருந்து வருகிறது. கூடுதல் பணம் கேட்பதால் டாஸ்மாக் கடையில் பணிபுரிவோருக்கும் மதுபானம் வாங்க வருவோருக்கும் இடையே பல நேரங்களில் வாக்குவாதமும் மோதலும் ஏற்படுகிறது.
இதுபோன்ற சூழலில் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகேற்ப அரசுத்துறை நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. அந்த வகையில் டாஸ்மாக் நிர்வாகமும் டிஜிட்டல் பாதைக்குள் நுழைய உள்ளது. மதுபானகள் உற்பத்தி, இருப்பு, விற்பனை போன்ற விவரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட உள்ளது.
அதன்படி மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான இயந்திரங்களையும், மதுபானங்களுக்கு பில் வழங்குவதற்கான உபகரணங்களையும் கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இ-டெண்டர் கோரியுள்ளது.
இந்த வசதிகள் நடைமுறைக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பது மது விரும்பிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், புதிய தொழில்நுட்பத்தை புகுத்த டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.