மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளருக்கு துன்புறுத்தல்; அமெரிக்க அதிபர் மாளிகை கண்டனம்

மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளருக்கு துன்புறுத்தல்; அமெரிக்க அதிபர் மாளிகை கண்டனம்

டெல்லி: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் ஜோ பைடனும் வாஷிங்டனில் கடந்த வியாழன்று (22, ஜூன்) கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் என்பவர், நரேந்திர மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினரின் கருத்துரிமை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “எனது அரசு அரசியலமைப்பைப் பின்பற்றுவதால் இந்தியாவில் பாகுபாடு பற்றிய கேள்வியே இல்லை‘ என்று குறிப்பிட்டார்.

பல மனித உரிமை குழுக்கள் இந்தியாவில் உள்ள பாகுபாடு பற்றியும் மாற்றுக் கருத்துகளை கொண்டவர்கள் நசுக்கப்படுவது குறித்தும் பேசி வருவதாக சப்ரினா சித்திக் கூறினார்.  “உங்கள் நாட்டில் (இந்தியாவில்) உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநிறுத்தவும் நீங்களும் உங்கள் அரசும் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறீர்கள்?” என்றும் பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் வினவினார்.  

அதற்கு பிரதமர் மோடி, “நீங்கள் கூறுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. நாங்கள் ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறோம். எங்கள் நாடி நரம்புகளில் ஜனநாயகம் பாய்கிறது. நாங்கள் ஜனநாயகத்தை சுவாசிக்கிறோம். அது எங்கள் அரசியலமைப்பில் உள்ளது“ என்று பதிலளித்தார்.  "மனித விழுமியங்களும் மனித உரிமைகளும் இல்லை என்றால் ஜனநாயகம் இல்லை... ஜனநாயகமாக வாழும்போது பாகுபாடு என்ற கேள்வியே இல்லை" என்று கூறிய பிரதமர் மோடி, "மதம், ஜாதி, வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வசதிகள் கிடைக்கும் என்றும் கூறினார்.  

இந்நிலையில், பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கை வசைபாடி, இந்தியாவிலிருந்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுதப்பட்டன. சப்ரினாவின் நோக்கங்கள் மற்றும் அவரது பாரம்பரியம் குறித்து ஆன்லைனில் கடுமையாக வசைகள் எழுந்தன.  

இதனை வன்மையாக கண்டித்திருக்கும் அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கிற்கு எதிரான ஆன்லைன் துன்புறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்தார். பத்திரிகை சுதந்திரத்தில் அதிபர் மாளிகை உறுதியாக இருப்பதாகவும் ஜீன் பியர் கூறினார்.