பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு; இகா ஸ்வியாடெக் 3ஆவது முறையாக சாம்பியன்
பிரான்ஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தலைநகர் பாரிஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனும் போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில், முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்திய ஸ்வியாடெக்,, இரண்டாவது செட்டில் தடுமாறினார்.
சற்று நிதானித்த விளையாடி கரோலினா முச்சோவா, இரண்டாவது செட்டில் ஸ்வியாடெக்கிற்கு நெருக்கடி கொடுத்தார். திறம்பட விளையாடிய முச்சோவா, இரண்டாவது செட்டை 5-7 என்ற கணக்கில் தனதாக்கினார்.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில், முச்சோவா செய்த தவறுகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார், ஸ்வியாடெக். போட்டியின் நடுவே தனது பயிற்சியாளரின் ஆலோசனையையும் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார், ஸ்வியாடெக்.
நான்கு ஆண்டுகளில் ஸ்வியாடெக், மூன்றாவது முறையாக பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் வென்றுள்ள நான்காவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.