மருத்துவர்களின் கூற்றை பொய்யாக்கிய டென்னிஸ் வீராங்கனை
இனிமேல் டென்னிஸ் விளையாட முடியாதா?
மருத்துவர்களின் கூற்றை வென்ற கரோலினா முச்சோவா..!!
இனிமேல் டென்னிஸ் விளையாடுவது கடினம் எனக்கூறிய மருத்துவர்களின் கூற்றை, நேர்மறை சிந்தனையோடு எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளதாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள கரோலினா முச்சோவா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான பெலாரஸ் நாட்டை சேர்ந்த (Aryna Sabalenka) அரினா சபலெங்காகை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில், கரோலினா கடுமையாகப் போராடி 7-6 (7/5), 6-7 (5/7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று, சபலெங்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றில் கரோலினா முச்சோவா இறுதிச்சுற்று வரை முன்னேறியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
அரையிறுதி ஆட்டத்தில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கரோலினா, தொடர்ந்து ஏற்பட்ட காயங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட போதிலும், அவற்றிலிருந்து மீண்டு வந்திருப்பதாகக் கூறினார்.
இனிமேல் தன்னால் விளையாட முடியாது என சில மரு்ததுவர்கள் கூறியதை கேட்டு கலங்காமல், நேர் மறை சிந்தனையை மனதில் வளர்த்து தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு மீண்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியபோது , மீண்டும் தரவரிசையில் முன்னேற வேண்டும் என்கிற வேட்கையுடன் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டதாக கரோலினா கூறியுள்ளார்.
காயங்களிலிருந்து மீண்டு டென்னிஸ் உலகை வியக்க வைத்திருக்கும் கரோலினா முச்சோவா, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் நாளை ( 10.06.23 ) நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக்கை எதிர்கொள்கிறார். போலந்து நாட்டைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக், சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.