நீதிமன்றங்களில் காந்தி, வள்ளுவர் படங்கள் மட்டும் தான்:  சென்னை உயர் நீதிமன்றம்

நீதிமன்றங்களில் காந்தி, வள்ளுவர் படங்கள் மட்டும் தான்:  சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தியடிகள் மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை மட்டுமே வைக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்கள் உருவப் படங்களை திறக்க அனுமதி வேண்டி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்ற சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், தேசியத் தலைவர்களின் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவங்கள் பிரச்னைக்கு வழிவகுத்தது பற்றியும், பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் படங்களை மட்டுமே வைக்கலாம் என்று உயர் நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவு மண்டபத்தில் இருந்து பி.ஆர்.அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்ற ஆலந்தூரில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தை வலியுறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.