ஆஷஸ் தொடர்; ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி
பர்மிங்காம்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 383 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 273 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 281 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.
5ஆவது மற்றும் கடைசி நாளான நேற்று அங்கு கனமழை பொழிந்ததால் 3 மணி நேரம் ஆட்டம் தடைபட்டது. வெற்றிக்கு மேலும் 174 ரன்கள் தேவை என்ற நிலையில் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. நெருக்கடி அதிகரித்ததால் ஆஸ்திரேலிய அணியினர் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். போலண்ட், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைத்து நின்று ஆடிய உஸ்மான் கவாஜா 65 ரன்னில் பென் ஸ்டோக்ஸிடம் வீழ்ந்தார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 20 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக இங்கிலாந்தின் கை ஓங்கியதால், அந்த அணியின் ரசிகர்கள் ஆரவாரக்குரல் எழுப்பத் தொடங்கினர்.
ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 227 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.
ஆனாலும் கேப்டன் பேட் கம்மின்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகிய இருவரும் தீர்க்கமாக விளையாடி இங்கிலாந்தின் வெற்றிக் கனவை தவிடுபொடியாக்கினர்.
27 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது ஆஸ்திரேலிய அணி. பேட் கம்மின்ஸ் 44 ரன்களுடனும், நாதன் லயன் 16 ரன்களுடனும் கடைசிவரை களத்தில் இருந்தனர்.
ஒன்பதாவது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் 72 பந்துகளில் 55 ரன்களை சேர்த்து, போட்டியின் முடிவையே மாற்றிவிட்டனர்.
50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளை விஞ்சும் வகையில் கடைசி நாள் ஆட்டம் அமைந்திருந்ததால் ரசிகர்கள் திகைத்துப் போயினர்.
இவ்வளவு த்ரில்லான வெற்றியை டெஸ்ட் போட்டியில் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இவ்வெற்றியின் மூலம் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 141 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 65 ரன்களும் எடுத்த உஸ்மான் கவாஜாவுக்கு போட்டி நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட்டில் 282 ரன்களை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது நினைவுகூரத்தக்கது.