ராகுலின் மேல் முறையீடு; குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ராகுலின் மேல் முறையீடு; குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி:  அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?“ என்று விமர்சித்தார்.

இது தொடர்பாக குஜராத் பாரதிய ஜனதா எம்எல்ஏ புர்னே ஷ் மோடி சூரத் பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டையும் விதித்தது.

இது தொடர்பாக சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (21, ஜூலை) விசாரணைக்கு வந்தது.

அப்போது ராகுலின் மேல் முறையீட்டு வழக்கில் பதிலளிக்க குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.